ராவணன்- பாடல் விமர்சனம்

வெள்ளி, 18 ஜூன், 2010

 உசிரே போகுதே : 

               "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது. குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு  துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். ட்ரம்ஸ்'ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார்.

வீரா வீரா : 

               அதிவேக எக்ஸ்பிரஸ் ஒன்றின் வேகத்தை வாத்தியக்கருகளின் மூலம் ஓடவிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “வீரா வீரா, தீரா தீரா” என்று விஜய் பிரகாஷின் குரல் உச்சஸ்தாயில் எகிறி எகிறி அடிக்கிறது. "ராமந்தேன் ராவணந்தேன்" என்று இராமத்து  ஸ்டைலில் குரல் ஒலிக்க, பின்னணியில் மேற்கத்திய வாத்தியக்கருவிகள் சுருதி சேர்ப்பது ரசனை.  பேன் பைப்ஸ்'ன் இசையை அதிரடியாய் பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான். தீம் சாங்காக இருக்கலாம். யாருக்குமே கேட்காதவாறு ஒளிந்து கொண்டு குரல் கொடுத்திருக்கிறார்  ரஹ்மான். இந்த அதிரடி இசை கீர்த்திசாகத்தியா’வின் குரலுக்கு பெரிதாய் வேலைகொடுக்கவில்லை.

கோடு போட்டா  : 

                இதோ பென்னி தயாளுக்கு இன்னொரு அதிரடி ஹிட் கிடைத்துவிட்டது. ஹோம் தியேட்டரை அதிர வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஹ்மான் விளையாடி இருக்கிறார். தடக் தடக் என்ற  ஆர்ப்பாட்டமான தாளக்கட்டில் தாவிகுதித்து விளையாடும்படி  அமைக்கப்பட்டிருக்கிறது. "சல்லிக்கட்டில் மாடி கிழிச்சா சரியும் குடலே மாலையடா" என்ற வரிகளில் வைரமுத்துவின் பேனா கூர்வாளாய் மாறி இருக்கிறது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று பீட்ஸின் ரேஞ்ச், ஹை பிட்சை தொட்டிருக்கிறது. பேஞ்ஜோ கருவியின் வேகத்திற்கு ரஹ்மான் சரி வேலை கொடுத்திருக்கிறார். .பாடலின் ஆக்ரோஷத்தை விக்ரமின் கண்ணில் பார்க்க ஆவலாக இருக்கிறது.

காட்டு சிறுக்கி : 

                "காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி யார் காட்டு சிறுக்கி" என்று ஒலிப்பது அனுராதா ஸ்ரீராமின் குரலா என்று ஒரு நிமிடம் வியந்துதான் போக வேண்டி இருக்கிறது. கீபோர்ட் நோட்ஸ் வெகு ஷார்ப். “காட்டு சிறுக்கி, நத்தைக்குட்டி” என வைரமுத்துவுக்கே உரிய  துள்ளல் தமிழ் வர்ணனைகளும் இதில் உண்டு. "மாயமாய் போவாளோ" என்று சங்கர் மகாதேவன் கொஞ்சுவது அழகு. எலக்ட்ரானிக் ஆர்கன் கிராமத்து ஸ்டைலில் பயணிப்பது புதுசு. ரஹ்மானின் தேடல் அதிசய வைக்கிறது. இராவணின் பாடல்களில் துள்ளாட்டமான டூயட்டிற்கு இந்தப்பாடல் உத்திரவாதம் அளிக்கிறது.

கள்வரே : 

            இனிப்புசுவை இல்லாமல் விருந்தா? மெலடி இல்லாத ரஹ்மானின் இசையா? இதோ அதற்கு விடை.. ஸ்ரேயா கோஷலின் குரலில் கஜல் இசையை வெகு இனிமையாய் படைத்திருக்கிறார் ரஹ்மான்."கள்வரே, கள்வரே கண் புகும் கள்வரே" என்று பைந்தமிழில் பரவசப்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. ஒரு அழகான மாலைப்பொழுதில் ஜன்னலோரம் சாய்ந்தவாறு இயற்கையை ரசித்தபடியே பருகும் தேநீரைப்போல் பரவசமாய் இருக்கிறது இந்தப்பாடல்.  தலைவனை நோக்கிய தலைவியின் ஏக்கத்தை மிகச்சரியாக இந்தப்பாடல் தனக்குள் பதிவு செய்து இருக்கிறது. "ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ரூமெண்டல்களை இத்தனை
 
             சுகமாக பயன்படுத்த முடியுமா? “வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் என தமிழுக்கு தெரிகிறது, அது தங்களுக்கு தெரியுமா?” என்று ஒரு பெண் கேட்பது போல் எழுதி இருக்கும் வைரமுத்துவின் விரல்களுக்கு அழுத்தமாய் கொடுக்கலாம் ஒரு முத்தம்.

கடா கறி : 

                  “கடா கடா கறி அடுப்புல கிடக்கு” என்று பென்னிதயாள், பாக்யராய், A.R.ரஹைனா, தன்விஷா ஆகியோரது குரலில், குழு பாடலாக ஒலிக்கிறது இந்தப்பாடல். டிபிக்கல் மலை வம்சத்தினர் பாடுவது போல ஹார்மோனிகா இசை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. காடுகள் என்றால் மூங்கிலால் சூழப்பட்டிருப்பதுதானே, மூங்கில் இசைக்கருவிகளின் கோர்வையால் இசையின் பின்னணி பின்னப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இருக்கும் கேட்சிங் ட்யூன் அடுத்தடுத்த வரிகளில் இல்லாதது சற்று ஏமாற்றமே. ராவணன்  ஆல்பத்தில் சுமாரான பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

                  மொத்தத்தில்  மணிரத்னம் - ரஹ்மான் காம்பினேஷனில் உருவாகி இருக்கும் ராவணன் இசை, ரசிகர்களுக்கு ஒரு பரவசமான அனுபவத்தையே கொடுக்கிறது. இந்த பாடல்கள் ஒரு வித்தியாசமான கலரை கொடுத்து இருக்கின்றன. புதுப்புது சவுண்ட்ஸ்'க்காக் மெனக்கேட்டிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் மணிரத்னத்தின் படங்களில் மிக ஸ்பெஷலாக இருக்கும் ரஹ்மானின் இசை, இந்தப்படத்தின் பாடல்களில் ஸ்பெஷலாக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை கேட்க கேட்க கிறுக்கு பிடிக்க வைக்கலாமோ என்னவோ?  ரஹ்மான் இசை எப்பவும் ஸ்லோ பாய்ஸன் போலத்தானே...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக